ஞாயிறு, 3 மே, 2020

திருநங்கைகள் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய காலம்நெருங்கிவிட்டது! - தோழர் பிரியா பாபு*

        திருநங்கைகள் குறித்து அண்மையில் வெளிவந்த திருமகள் குறும்படம் பற்றியான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (03.05.2020) காலை 11. 00 மணியளவில் நடைபெற்றது. தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை மனிதர்கள், எழுத்துகள், கலைகள் பற்றிய விழிப்புணர்வு, புத்தெழுச்சி  இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. அதனூடாக விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளிவரத் தொடங்கின. அவர்கள் எழுத்தினைத் தங்களுடைய விடுதலைக்கான ஆயுதமாக எடுக்கத் தொடங்கினர். கதை, நாவல், கவிதை, கலைகள் என்ற வடிவில் தங்களுக்கான குரலை முன்வைத்தனர். அந்த வரிசையில் காட்சி ஊடகங்களும் இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றன. திருமகள் குறும்படம் குறித்த அறிமுகத்தை மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் பின்னணியோடு  மணிமொழி வழங்கினார். 

        பிரியாபாபு அடிப்படையில் திருநங்கை. இவர் சிறு வயதிலேயே தன்னிடம் பெண்தன்மை உள்ளதை உணர்ந்ததன் அடிப்படையில் திருநங்கையாக மாறினார். பிழைப்புத் தேடி  தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்றார். அங்கு பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்து பெற்ற பணத்தில் புத்தகங்களை வாங்கி வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. சமுத்திரத்தின் வாடாமல்லி நாவலைப் படித்து, புத்துணர்ச்சி கொண்ட பிரியாபாபுவின் மனதில் நாம் ஏன் போராளியாக மாறக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாகத் திருநங்கையரின் வாழ்விற்காக நல்ல முன்னெடுப்புகளை முன்னெடுக்கத் தொடங்கினார்.
திருநங்கைகள், திருநம்பிகள் என்றழைக்கப்படும் மாற்று பாலினத்தவர் பற்றிய ஆய்வுகளையும் அவர்களுக்காக தொடர்ச்சியான போராட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்ற தோழர் பிரியா பாபு அவர்கள் மதுரையில் தற்போது திருநங்கைகள் ஆவணக்காப்பகத்தை நடத்தி வருகின்றார். திருநங்கைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஆராய்ச்சிக்கான தளத்தினையும் ஏற்படுத்தித் தரும் இரண்டு முக்கியமான பணிகளை இம்மையத்தின் வாயிலாகச் செய்து வருகின்றார். குறும்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் எழுதிய நூல்களுள் வெற்றிப்பாதையில் திருநங்கைகள், மூன்றாம் பாலின முகம், அரவானிகள் சமூக வரைவியல் ஆகியன குறிப்பிடத்தக்கன. அவர் இந்நிகழ்ச்சிக்கு நம்மழைப்பையேற்று கலந்துரையாட வந்திருந்தார். 

        நண்பர்கள் விவாதித்ததன் அடிப்படையில் தன்னுடைய உரையைத் தொடங்கினார் தோழர் பிரியாபாபு. (திருமகள் குறும்படம் வாழ்வியல் எதார்த்தத்தைப் பேசவில்லை, திருநங்கையர்க்குப் பிள்ளைப்பேறு சாத்தியப்படும் ஒன்றா?, மூன்றாம் பாலினம் குறித்த விவாதம், திருநங்கைகள் குறித்த ஆய்வு, ஆவணக் காப்பகத்தின் பணிகள், திருநங்கையரின் எழுத்துகள், திரைப்படங்களில் திருநங்கைகளை இழிவாகக் காண்பிக்கும் போக்கு, அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்கள்) அவருடைய பேச்சின் சுருக்கம். 

        திருநங்கைகள் குறித்த பல ஏராளமான படங்கள் அதன் வாழ்வியல் யதார்த்தங்களை பற்றி பேசி இருக்கின்றன ஆனால் திரும்பத் திரும்ப எதார்த்தங்களை பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.  திருமகள் குறும்படம் அடுத்தகட்ட நகர்விற்கான முன்னெடுப்பு என்றே கருதுகின்றேன் . இன்னும் ஆழமான வலிகள் எங்களுக்கு இருக்கின்றது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். புற பிரச்சினைகளை மட்டுமே பேசுவது குறும்படத்தின் நோக்கமாக இருக்காது. எங்களுக்கான அகப் பிரச்சனைகளையும் அது பேச வேண்டும். அதனை இந்தக் குறும்படம் ஓரளவு நிறைவு செய்திருக்கின்றது . 

         இக்குறும்படத்தில் வரும் பிள்ளைப்பேறு பற்றி பலரும் பேசுகிறார்கள். நடைமுறை அறிவியல் உலகில் வளர்ந்து வரும் மாற்றங்களினால் இது சாத்தியப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்.  இக்குறும்படத்தில் கருவிலேயே திருநங்கைகளுக்கான கூறு இருப்பதனைக் கண்டறிந்து அதனைக் கருவிலேயே கொல்லும் அறிவியல் குறித்த கண்டுபிடிப்பினை ஒரு மருத்துவர் மேற்கொண்டு வருகின்றார் . அதனைக் கண்டறிந்த ஒரு கருவுற்ற பெண், பேசும் பகுதி முக்கியமான விடயம். பிறப்பினால் யாரும் ஊனம் இல்லை.  திருநங்கைகளைக் கருவிலேயே கண்டறிந்து கொல்வது மிகவும் கீழ்த்தரமான மனிதமற்ற செயல். தமிழ்ச் சூழலில் இக்குறும்படம் கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அது பேசுவது ஆழமான பிரச்சனை. பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டே இக்குறும்படம் எடுக்கப்பட்டது. 

         மூன்றாம் பாலினம் என்ற சொல்லாடல் தேவையில்லை. அது மீண்டும் ஆணாதிக்க சமூகத்தையே முன்னிலைப்படுத்தும். திருநங்கை, திருநம்பி, மாற்றுப் பாலினம் என்ற சொல்லாடலே மிகவும் பொருத்தமாக இருக்கும். 

          அரசியல் அதிகாரத்தைத் திருநங்கைகள் கையில் எடுக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.  இது அம்பேத்கரின் கொள்கைகள் இதனை பேசுகின்றன.  பல அரசியல் இயக்கங்களில் திருநங்கைகள் இன்று அதிகாரத்தில் உள்ளனர்.  அது இன்னும் வலுப்பட வேண்டும். சட்ட அதிகாரத்தை இயற்றும் இடத்திற்கு வரவேண்டும்.

         நான் ஐந்தாறு ஆண்டுகளாகத் தமிழ் சமூகத்தில் திருநங்கைகள் வரலாற்று ஆய்வு என்னும் பொருண்மையில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றேன். தொல்காப்பியத்திலிருந்தே நமக்கு திருநங்கைகள் குறித்த மாற்றுப்பாலினம் குறித்த பதிவுகள் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம்,  சீவக சிந்தாமணி , பக்தி இலக்கியங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலும் ஏராளமான பதிவுகள் உள்ளன . நாட்டார் வழக்காற்றிலும்,  வழிபாட்டு முறைகளிலும் திருநங்கையர் குறித்த சான்றுகள் உள்ளன. இதனை வரலாற்று நோக்கில் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. 

       திரைப்படங்களில் திருநங்கையர் தவறானவர்களாக அடையாளப்படுத்தப் படுகின்றனர்.  கொச்சை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அப்பு, ஐ, நர்த்தகி போன்ற படங்கள் அவ்வாறு சித்தரித்துள்ளன. இதனையெல்லாம் கண்டித்து பல போராட்டங்களை நிகழ்த்தி உள்ளோம்.

        இந்தியச் சூழலை ஒப்பிடுகையில் தமிழ் சூழல் மிகவும் எங்களுக்குப் பல அரசு சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்துள்ளது . அதற்குப் பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைப் பின்புலமுடைய ஆட்சியாளர்களே காரணம் . தன்னெழுச்சியாகவும் திருநங்கையர் பல துறைகளில் இன்று முன்னேறி உள்ளனர் . வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தென் மாநிலங்கள் எங்கள் விடயயத்தில் வளர்ச்சி அடைந்திருக்கின்றன . இன்னும் நல்ல முன்னெடுப்புகளை எடுப்போம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.  

        எங்களுடைய திருநங்கையர் ஆவணக்காப்பகம் இரண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.  கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,  திருநங்கையர் குறித்த ஆராய்ச்சி தளத்தினை வலுப்படுத்துதல்.

          எங்களுடைய நூலகத்தில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் குறித்த நூல்கள் , 9000 த்திற்கும் மேற்பட்ட செய்தித் தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 

           எங்களுடைய வலிமிகுந்த வாழ்க்கையை எழுதுவது இன்று எங்களுக்குச் சாத்தியமாகியுள்ளது . முகநூல் வருகை எங்களுக்கு நல்ல களமாக இருக்கின்றது. திருநங்கை எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கின்றார்கள், அவர்களுள்  ஆஷா பாரதி, ரேவதி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  எங்களுடைய நூல்களுள் விலகும் பனித்திரை, உணர்வும் உருவமும், வெள்ளை மொழி போன்ற நூல்கள் பல கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் உள்ளன.  நந்தன், ஜனனம் போன்ற இதழ்களில் எங்களுடைய படைப்புகள் வெளியாகியுள்ளன . இந்திய அளவில் முதன்முதலாக திருநங்கையருக்கென்று மின்னிதழைத் தொடங்க ஏற்பாடு செய்து வருகின்றோம் . காட்சி ஊடகத்திலும் எங்கள் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  Transmedia என்ற பெயரில் YouTube channel லைத் தொடங்கியுள்ளோம். 

       எங்களுடைய விடுதலைக்காகக் கல்வியை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      தொடர்ச்சியாகத் திருமகள் குறும்பட இயக்குனர் ஆண்டிராஜன் குறும்படம் குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் . சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா-நானா நிகழ்ச்சியில் பிரியா பாபுவைச் சந்தித்தேன். அந்நிகழ்ச்சியில் பேசிய பிரியாபாபு  "மனதளவில் உடலளவில்  ஆணை திருநங்கைகள் மகிழ்வாக வைத்துக்கொள்ள முடியும், என்ன குழந்தை மட்டும் பெற்று எடுக்க முடியாது." என்றார். அப்பேச்சு என்னுள் உந்துதலை ஏற்படுத்தியது. அதனுடைய தாக்கம்தான் திருமகள். எதார்த்தமற்ற படம்தான். ஆனால் நம்பிக்கையோடு எடுக்கப்பட்டுள்ளது. திருநங்கையர்க்கான குழந்தைப்பேறை மையப்படுத்தியே இப்படம் நகர்கின்றது.  எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு நன்றி.

        இவ்வாறாக இன்றைய நிகழ்வு நல்லதொரு விவாதக் களமாக அமைந்தது. அடுத்த நிகழ்வில் மீண்டும் உரையாடுவோம்.

நன்றி

அன்புடன்
வெட்சி இதழுக்கான திணைக்களம்


திங்கள், 5 மார்ச், 2018


கட்டுரை மதிப்புரை
      கபிலர் அறிவித்த தமிழ்
      .மருதநாயகம்
      தொகுப்பு : குறிஞ்சிப்பாட்டு மீள்பார்வைகள்
      பதிப்பாசிரியர் : மு.சுதர்சன்
      முதல் பதிப்பு - அக்டோபர், 2006
      வெளியீடு : மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் - 608 001
      விலை : உரூ. 60.00

குறிஞ்சிப்பாட்டைக் கற்க நுழைவுவாயில் .மருதநாயகத்தின் கபிலர் அறிவித்த தமிழ் எனும் கட்டுரை
  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச்சுவையை அறிவுறுத்தப்பொருட்டு இது பாடப்பட்டதென்பர்; இவ்வரலாற்றால் இந்நூலின் மேம்பாடு கூறாமலே விளங்கும் என்று பத்துப்பாட்டைப் பதிப்பித்த .வே.சாமிநாத அய்யர் முகவுரையில் குறிப்பிடுகின்றார். எனவே, ஆரியஅரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச்சுவை என்பதைக் களவினையும் கற்பினையும் இணைக்கும் பாலமான அறத்தொடு நிற்றல் என்னும் நிகழ்வைச் சிறப்பித்துக் கூறுதன்பொருட்டு எழுந்தது என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.
  கபிலர் காலத்தில் (கி.மு.3-கி.பி.3) வடமொழிலுள்ள கந்தருவ மணத்திற்கும், தமிழ் மரபிலுள்ள களவொழுக்கத்திற்கும் ஒற்றுமையுண்டு என்ற கருத்தாக்கம் உருப்பெற்றிருந்தது. ஆனால், களவொழுக்கத்திற்கும் கந்தருவத்திற்குமுள்ள வேறுபாட்டை உணர்த்த வேண்டும், இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடான அறத்தொடு நிற்றல் என்னும் நிகழ்வுண்டு, அதனை மையப்படுத்திக் கொண்டே குறிஞ்சிப்பாட்டை முன்னெடுக்கிறார் கபிலர். கந்தருவமும் களவொழுக்கமும் ஒன்றுதான் அல்லது இரண்டிற்கும் ஒத்தபண்புண்டு என்ற கருத்தாக்கம் வரலாற்றில் தொடர்ந்து நிலவிவந்திருக்கின்றது. தொல்காப்பியத்தில் இடம்பெறும்,
      இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
      அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
      காமக் கூட்டங் காணுங் காலை
      மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
      துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல் : கள : 01)
என்ற நூற்பாதான், முதன்முதலில் நமக்கு வடமரபிலுள்ள கந்தருவ மணத்தைக் குறிப்பிடுகின்றது. இதற்கு உரைகண்டோர், இன்பமும் பொருளும் அறனும் என்று               சொல்லப்பட்ட மூவகைப் பொருள்களுள் இன்பம் நிகழ்தற்கு இடமாகிய அல்லது ஒழுக்கமாகிய புணர்தல், இருத்தல் முதலிய ஐந்திணைகளுள் இயற்கைப் புணர்ச்சியை ஆய்ந்தால், அஃது ஆரியர்களின் எண்வகை மணங்களுள் ஒன்றாகிய கந்தருவர்களின் (யாழோர் கூட்டம்) ஒழுக்கத்தைப் போன்றதாகும் என்கின்றனர். 
    பரிபாடல் காலந்தொட்டு இன்றுவரை கந்தருவமும் களவும் ஒன்றே அல்லது ஒத்த பண்புடையன என்ற கருத்திற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பலர் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றனர். அந்த வகையில்தான் .மருதநாயகத்தின் கபிலர் அறிவித்த தமிழ் என்னும் கட்டுரை, கந்தருவத்திற்கும் களவிற்குமான வேறுபாட்டை அறிவிக்க வேண்டியே கபிலர் ஆரிய அரசனுக்கு குறிஞ்சிப்பாட்டை இயற்ற வேண்டியதாயிருந்தது என்பதை நிறுவ முயற்சித்துள்ளார்.
  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக, 24-04-2005 இல் குறிஞ்சிப்பாட்டு - பன்முக நோக்கு என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், குறிஞ்சிப்பாட்டு குறித்த அரிய கட்டுரைகளைத் தொகுத்து மு.சுதர்சன்குறிஞ்சிப்பாட்டு மீள்பார்வைகள்எனும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
  கபிலர் ஆரிய அரசனுக்குத் தமிழ் அறிவித்தான் என்ற நச்சினார்க்கினியரின் குறிஞ்சிப்பாட்டு முற்றுரைப்பையும், தொல்காப்பியக் களவியல் முதல்நூற்பாவில் இடம்பெறும் யாழோர் கூட்டம் என்பதையும் இணைத்துப்பார்க்க வேண்டும். 
   கட்டுரையின் தொடக்கத்தில் .மருதநாயகம், குறிஞ்சிப்பாட்டின் இறுதியில் இடம்பெறும் இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டி, தமது கருத்தாடலைத் தொடங்குகின்றார். கருத்தாடலின் தொடக்கமாய் அவர் குறிப்பிடுவது,
  ‘‘களவு மணம் கந்தருவ மணத்தை ஒத்ததுதானே என்பார்க்குக் களவு மணம் கந்தருவ மணத்தினின்றும் மற்றைய ஏழு மணங்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது என்பதைக் கபிலருடைய குறிஞ்சிப்பாட்டு தெளிவுபடுத்தும்.’’  (குறிஞ்.பா.மீள்பா,.66) என்கின்றார்.
      அடுத்ததாக, மேற்சொன்ன கருத்தை நிறுவிட, சில சான்றுகளை முன்வைப்பதற்கு முன்னர்,
  ‘‘வடவரின் எட்டு மணங்கள் பற்றி வாத்ஸ்யாயனாரின் காமசூத்திரமும் மனுநூலும் தமிழ்நூல்களும் கூறும் கருத்துக்களை ஆழ்ந்து நோக்குவார் கந்தருவ மணம்  களவு மணத்தினின்றும் முற்றும் வேறுபட்டதாயினும் தமிழின் உட்பகைவர்களால் அவை இரண்டும் ஒன்றே என்று காட்டும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதைக் காணலாம்.’’ (குறிஞ்.பா.மீள்பா,.66) என மருதநாயகம் கருதுகின்றார்.
      நாம் மேற்சொன்ன கருத்துக்குச் சான்றாகப் பின்வரும் சான்றுகளைக் காட்டமுடியும்.
      இறையனார் களவியல், இறையனார் களவியலுரை, அவிநயம் போன்றவற்றில், காந்தருவமே களவு என்று பொருள்கொள்ளப்பட்டிருக்கின்றது.
      ‘‘அன்பி னைந்திணைக் களவெனப் படுவ/தந்தண ரருமறை மன்ற லெட்டனுட்
      கந்தருவ வழக்க மென்மனார் புலவர்’’(.கள.1)
      அவிநயனார் கூறிய செய்யுட்களை .சி.கந்தைய ஆச்சாரியார் தமது தமிழர் மணமும் தாலியும் எனும் நூலில் எடுத்துரைக்கின்றார்.
      முன்னை வினையின் முறையால் களவியலால்
      கன்னியைக் கண்டுடன் காதலித்துப் - பின்னர்
      உளந்திகழ ஆர்வம் உரைத்தொத் துறுதல்
      வளம்மிகு காந்தர்வ மணம்
      ஒத்த குலத்தார் தமியரா யோரிடத்துத்/தத்தமிற் கண்டதம் மன்பினா - லுய்த்திட
      வந்தர மின்றிப் புணர்வ த்துவரோ/ கந்தருவ மென்ற கருத்து.
      முற்செய் வினையது முறையா வுண்மையி/னொத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து
      காட்சி யையந் தெரிதல் தேற்றலென/நான்கிறந் தவட்கு நாணு மடனும்
      அச்சமும் பயிர்ப்பு மவற்கு/முயிர்த்தகத் தடக்கிய
      அறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமு/மறைய வவர்க்கு மாண்டதோ ரிடத்தின்
      மெய்யுறு வகையு முள்ளல்ல துடம்புறப் படாத்/தமிழியல் வழக்கமெனத்
      தன்னன்பு மிகை பெருகிய / களவெனப் படுவது கந்தருவ மணமே!  (.11) என களவு கந்தருவமாகப் பொருள்கொள்ளப்பட்டிருக்கின்றது.
      மனுநூலின் 3 ஆம் அதிகாரம் குறிப்பிடும் மணம் செய்வதற்குரிய தகுதிகள், யாரையெல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்ற பட்டியலை மேற்கோள்காட்டும் ஆசிரியர், நால்வருணத்தார் எத்தனை மனைவிமார்களை வைத்துக் கொள்ளலாம் என்ற பட்டியலை மனுநூலிலிருந்து எடுத்துரைக்கின்றார்.
      1. சூத்திரனுக்கு ஒரு சூத்திரப்பெண்
      2. வைசியனுக்கு ஒரு வைசியப்பெண்ணும், ஒரு சூத்திரப்பெண்ணும்
      3. சத்திரியனுக்கு ஒரு சத்திரியப்பெண்ணும், ஒரு வைசியப்பெண்ணும், ஒரு                சூத்திரப்பெண்ணும்
      4. பிராமணனுக்கு ஒரு பிராமணப் பெண்ணும் ஒரு சத்திரியப்பெண்ணும், ஒரு       வைசியப்பெண்ணும், ஒரு சூத்திரப்பெண்ணும் மனைவியாக இருக்கலாம்.
அடுத்து, ஆசிரியர் மணமுறைகள் குறித்து மனுநூலில் குறிப்பிடும் முறைகளை உரைக்கின்றார். அவற்றுள் மனு முன்னர் கந்தருவம் பிராமணர்க்குரியது என்று முன்னர் கூறிவிட்டு, பின்னர் ஒரு பகுதியில் கந்தருவமுறை ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல முறையன்று என்று முரணனான கருத்தைத் தெரிவிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றார்.
      கந்தருவம் குற்றமுள்ள மணங்களுள் ஒன்று என்பதையும், அது வட்மொழி மரபில் பெருமையாகப் பேசப்படவில்லை என்பதை ஆசிரியர் இருக்குவேதம், காமசூத்திரம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டோனிகரின் கூற்றைச் சான்றாகக் காட்டுகின்றார். அதன் பின்னர், தொல்காப்பியத்தில் இடம்பெறும் களவியல் முதல் நூற்பாவை இடைச்செருகல் என்பதை,
      காந்தர்வ மணத்தைப் பாராட்டி அது பிராமணரைத் தவிர ஏனைய வருணத்தாருக்குத் தலைசிறந்தது என்று கூறும்பகுதி அதற்கு முன்னாலும் பின்னாலும் அது பற்றிச் சொல்லப்படும் கருத்துக்களுக்கெல்லாம் முரண்பட்டதாக இருப்பதால் தமிழர் களவு மணத்திற்கு அளித்திருந்த உயர்வின் சிறப்புகருதி இடைச்செருகலாகப் பின்வந்தோரால் முரண்பாட்டை நோக்காமல் சேர்க்கப்பட்ட தென்று முடிவு செய்வதில் தவறில்லை. (குறிஞ்.பா.மீள்பா,.71) என்றவாறு குறிப்பிடுகின்றார்.
      வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்தில் காதல்திருமணமாகிய கந்தருவ விவாகம் குறித்த விவரணையை மேற்கோள்காட்டும் ஆசிரியர், களவிற்கும் கந்தருவத்திற்குமான வேறுபாட்டைச் எளிமையாகச் சொல்லிச் செல்கின்றார்.
      கந்தருவ மணம் ஒரு பெண்ணை ஏமாற்றிப் புணர்ந்து பின்னர் பலர் அறியச்செய்வது காந்தர்வ விவாகம் என்பதால் அது தமிழர் போற்றிய களவு மணத்தை ஒத்ததென்று கூறும் வரிகள் பின்னால் உள்நோக்குடன் நுழைக்கப்பட்ட இடைச்செருகல்களே என்பதில் ஐயமில்லை. (குறிஞ்.பா.மீள்பா,.72)
      இதே கருத்தையே .நெடுஞ்செழியன், ‘‘தமிழ் அகத்திணை மரபுகளும் இந்திய காதற் பாடல்களும்’’ என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். காந்தருவ மணம் களவுடன் ஒருபோதும் பொருந்தாது என்பதைப் பின்வரும் சான்றுகள் காட்டி நிறுவுகின்றார். (அறத்தொடு நிற்றல் அகத்திணைக் கட்டமைப்பில் சிறந்தது என்பதை இராசமாணிக்கனார் கூற்றை எடுத்துக்காட்டி, பின்வரும் நூற்பாவை மறுஆய்வுக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர் .நெடுஞ்செழியன்.)
      இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு/ அன்பொடு புணர்ந்த ஐந்திணை               மருங்கிற்/காமக் கூட்டங் காணுங் காலை/ மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
      துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல் : கள : 01)
என்பதே அந்நூற்பா. நூற்பாவின் ஈற்றடி கந்தருவ மணத்தைக் குறிப்பதாகும். கந்தருவம் என்பது ஒத்த இருவர் - அதாவது முன்பின் அறியாத ஒத்த இருவர் எதிர்பாரா வகையில் சந்திக்க அதன் விளைவால் கூடும் கூட்டம். அந்தக் கூட்டம் மணவாழ்வில் முடிவதற்கோ அல்லது மணவாழ்வில் ஈடுபட்டார் என்பதற்கோ எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை. அத்துடன் இருக்கு வேதம் தொகுப்பட்ட கி.மு. 15 - 14 ஆம் நூற்றாண்டில் மறையோர் திருமணமுறைகள் எட்டாக வரையறை செய்யப்படவில்லை. இருக்கு வேதத்தில் (து.85) இடம்பெற்றுள்ளதும் இன்றுவரை இந்துத் திருமணங்களில் சொல்லப் பட்டு வருவதுமான திருமண மந்திரங்கள் வைதிகத் திருமண முறைகள் எட்டனுள் பிரமத்திற்கு மட்டுமே உரியனவாக இருந்தன என்றும், இருக்கு வேதகாலத் திருமண முறைகளில் அதுவே பரவலாக இருந்தது எனவும் கூறுவார் பி.வி. கானே. மேலும்,
      பிற்கால வேத இலக்கியங்களில்  கூறப்படும் ஆசுரம் எனும் திருமண முறை - அதாவது பெண்ணை விலைக்கு வாங்கும் திருமணமுறை வேத காலத்தில் காணப்படவில்லை. (கீ.ஞ் ஙஞுஞீச் ஙீ.85, ..ஓச்ணஞு, ஏடிண்tணிணூதூ ணிஞூ ஈடச்ணூட்ச் குச்ண்tணூச்ண், ஙணிடூ.,ணீ.7)
எனவும் உறுதி செய்கிறார்.
      அதனால் இருக்குவேத காலத்தில் மணமுறை எட்டாக வகுக்கப்படவில்லை என்பதும், இவ்வரையறை தரும சாத்திரக்காரர்களால் உருவாக்கப் பட்டுள்ளது என்பதும் உறுதி. எனவே தொல்காப்பியக் களவியலில் முதல் நூற்பாவாக இடம்பெற்றுள்ள இன்பமும் பொருளும் எனத் தொடங்கும் நூற்பா இடைச் செருகல் என்பது தெளியப்படும். கந்தருவம் என்பதற்கு இறையனார் களவியல் உரை,
      இனிக் கந்தருவ வழக்கம் என்பது கந்தருவர் என்பார் ஈண்டுச் செய்த நல்வினைப் பயத்தால் ஒருவர் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி, இருவரும் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுப் புணர்வது இது காந்தர்ப்ப மணம். இதனை ஒப்பதனைக் களவு என வேண்டும் இவ்வாசிரியன். (இறையனார் களவியல் உரை, .27) எனக்கூறுவதால் கந்தருவ மணத்தின் இயல்பினை அறியலாம். திணை, கூற்று, கூற்றுக்குரியோர் - வரைவு - வரைவு கடாதல் என விரியும் களவியல் துறைகளுக்குக் கந்தருவ மணம் எந்த வகையிலும் பொருந்தி வரவில்லை. அக்கந்தருவ மணத்திற்கு வடமொழி இலக்கியங்களில் - காளிதாசரின் சாகுந்தலத்தில், வரும் துசியந்தன் - சகுந்தலை கூட்டமே எடுத்துக்காட்டப் படுகிறது. அது திருமணமாகக் கருதப்படவில்லை. மேலும், தொல்காப்பியக் களவியலின் தற்போது இரண்டாம் நூற்பாவாக இடம்பெற்றுள்ளதும் நாம் அறிந்ததுமான,
      ஒன்றே வேறே என்றிரு பால்வயின் / ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
      ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப/ மிக்கோ னாயினும் கடிவரை யின்றே
எனும் நூற்பாவே களவியலின் முதல் நூற்பாவாக இருந்திருக்க வேண்டும். மணப்பருவம் வாய்ந்த ஆணும் பெண்ணும் எதிர்பாரா வகையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வு, ஈர்ப்பாகி - தூண்டுதலாகிப் பின்னர் உந்துதலாகிப் படிப்படியான வளர்ச்சி பெறுவதை அடுத்தடுத்து விளக்குவார் தொல்காப்பியர். இந்த அளவையியல் முறைக்கு, இன்பமும் பொருளும் என்றாங்கு எனும் முதல் நூற்பா இடம் தரவில்லை. கந்தருவ மணம் போன்றதொரு குடும்ப வாழ்க்கைக்கு உதவாத ஒரு நிகழ்வுக்குத் தமிழ் அகத்திணை மரபின் அடையாளமாகப் போற்றப்படும் அறத்தொடு நிற்றல் எனும் துறை தேவையில்லை.’’ (பக்.282-84)
      நம்முடைய களவு ஒழுக்கமோ, அறத்தொடு நிற்றல் என்னும் நிகழ்வின் வாயிலாக, நாடறி நன்மணமாக மாற்றுவது. களவு கற்பில் முடிந்தே தீரவேண்டும். இதனைக் கபிலர்,
      நேரிறை முன்கை பற்றி நுமர்தர
      நாடறி நன்மணம் அயர்கம் சின்னாள்
      கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென
      ஈர நன்மொழி தீரக் கூறி.. (குறிஞ்.பா.231-34)
என்ற பாடலடிகளின் வழி இயம்புகின்றார்.
      காதல் திருமணமாகிய காந்தர்வ மணத்தைத் தீயது என்று முன்னர் கூறிய காமசூத்திரம், பின்னர், ‘காதல் எல்லா மணங்களிலும் உயர்ந்ததாகக் கருதப்பபடுகின்றது ஏனெனில், அது இன்பம் தருகிறது., துன்பம் தருவதில்லை’ (மேலது,.73) என்கின்றது. எனவே, இது போன்ற முரணானவற்றை ஆசிரியர்,
      காதல் திருமணம் பற்றிய பாராட்டு அதை அவர் ஏற்கனவே விளக்கியதிலிருந்து மாறுபட்டிருப்பதையும் முதலில் சொல்லப்பட்ட பிரமம் அதனினும் உயர்ந்ததென்ற கூற்றை மறுப்பதையும் காண்க. தமிழர் அகவிலக்கியத்தில் கொண்டாடிய களவு மணத்தை ஒத்தது இதுவென்று சுட்டும் விழைவால் ஏற்பட்ட இடைச்செருகலாகவும் இது இருக்கலாம்.’ (மேலது,.73) என்கிறார்.
      இத்தகைய விவாதங்கள் இன்று நேற்று தோன்றியதல்ல. பரிபாடலின் காலத்திலேயே தோன்றிற்று.      பரிபாடலில் இடம்பெறும் குன்றம்பூதனாரின் பாடலொன்று, தமிழிலுள்ள குறிஞ்சி நிலத்திற்குரிய அகத்திணை மரபினை (களவை) வடமொழியாளர்க்கு சில நுட்பங்களுடன் எடுத்துரைக்கின்றது. இப்பாடல் இதோ
      நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்/ வாய்மொழிப் புலவீர்! கேண்மின்! சிறந்தது
      காதற் காமம் காமத்துச் சிறந்தது/விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி
      புலத்தலிற் சிறந்தது கற்பே அதுதான்/இரத்தலும் ஈதலும் இவையுள் ளீடாப்
      பரத்தையுள்ள துவே பண்புறு கழறல்/தோள் புதிதுண்ட பரத்தையிற் சிவப்புற
      நாள் அணிந்து உவக்கும் சுணங்கறை யதுவே/கேள் அணங்குற மனைக் கிளந்துள            சுணங்கறை/சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே அதனால்
      அகறல் அறியா அணியிழை நல்லார்/இகறலைக் கொண்டு துனிக்கும் தவறிலர் இத்
      தள்ளாப் பொருள் இயல்பின் தண்தமிழ் ஆய் வந்திலார்/கொள்ளார்இக் குன்று பயன் (பரி:9)மேற்சொன்ன பாடலிலுள்ள தமிழ் மரபு வடமொழிக்கு எப்படி பொருந்தும் என்பதாகவுள்ளது.

      ஆகவே, குறிஞ்சிப்பாட்டைக் கபிலர் எழுதியதன் நோக்கம், அல்லது குறிஞ்சிப்பாட்டு எழுந்ததின் பின்னணி அன்று திராவிட ஆரிய என்ற இரண்டு புலமை மரபுகளுக்கிடையே ஒரு மிகப்பெரிய விவாதம் நடைபெற்றிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அவற்றில் தமிழர்க்குரிய களவொழுக்கத்திற்குரிய சிறப்பை அழகாக எடுத்துரைக்கின்றார் என்பதைப் .மருதநாயகம் தன்னுடைய கபிலர் அறிவித்த தமிழ் எனும் கட்டுரையில், ஒப்பிலக்கிய அணுகுமுறையில் நிறுவியுள்ளார். வெறுமனே இங்குள்ள இலக்கியங்களிலுள்ள சான்றுகளைக் காட்டாமல், கந்தர்வ பற்றிய செய்திகள் நிரம்பியுள்ள வடமொழியிலுள்ள மனுநூல், காமசூத்திரம் தரும் செய்திகளைச் சான்றாய்க் காட்டுவது பாராட்டிற்குரியது. அவ்வகையில் ஒப்பிலக்கிய ஆய்வென்பது இவரது வழியாகச் செல்வது தமிழிற்குக் கிட்டிய பேறு என்றுதான் என்னால் அணியமுடிகின்றது. சிலர் மருளவும் கூடும். இது மருளல்ல இதுதான் நுட்பமாய் ஆய்ந்தவர்கள் தரும் உண்மை.